"அப்பா" எப்படி இருக்கீங்க ??? கலெக்டரைப் பார்த்ததும் நெகிழ்ந்த மாணவி... 14 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரும் ஓர் புனித உறவு !!!
"அப்பா" எப்படி இருக்கீங்க ??? கலெக்டரைப் பார்த்ததும் நெகிழ்ந்த மாணவி... 14 ஆண்டுகளுக்குப் பிறகும் தொடரும் ஓர் புனித உறவு !!!
சுனாமி... கடந்த 2004-ம் ஆண்டு தமிழகத்தை புரட்டிப் போட்டதை மறந்துவிட முடியாது. சுனாமி தாக்கியதில் நாகை, கடலூர் மாவட்டங்கள் நிர்மூலமாகின. நாகை மாவட்டத்தில் ஏராளமான குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்கள் ஆனார்கள். அப்போதைய, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெற்றோரை இழந்து ஆதரவற்று நின்ற 99 குழந்தைகளுக்காக 'அன்னை சத்யா' என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தைத் தொடங்க நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த ராதாகிருஷ்ணணுக்கு உத்தரவிட்டார். கீச்சாங்குப்பத்தில் மீனா என்ற சிறுமியும் வேளாங்கண்ணி ஆலயம் அருகே சவுமியா என்ற சிறுமியும் பெற்றோரை இழந்து அழுதபடி நின்று கொண்டிருந்தனர். இருவரும் 2, 3 வயது மழலைகள்.
தவித்தபடி நின்ற குழந்தைகளை மீட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன், அவர்களை அன்னை சத்யா இல்லத்தில் சேர்த்து பார்த்துக்கொண்டார். நாகை மாவட்ட ஆட்சியராக ராதாகிருஷ்ணன் இருந்த காலம் வரை தன் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்தனுடன் இந்தக் காப்பகத்துக்கு அடிக்கடி சென்று சிறுமிகளுடன் நேரம் செலவழிப்பார். சிறுமிகளின் தேவைகளை அருகிலிருந்து பார்த்துக்கொள்வார்கள். குழந்தைகளும் இந்த தம்பதியை அப்பா, அம்மா என்றே அழைப்பார்கள்.
நாளடைவில் பதவி உயர்வு கிடைத்ததும் ராதாகிருஷ்ணன் சென்னை வந்துவிட்டார். எனினும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாகை சென்று இந்தச் சிறுமிகளை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ராதாகிருஷ்ணன். காப்பகத்தில் இருந்த பல சிறுமிகள் தற்போது பெரியவர்களாகி திருமணமாகி சென்றுவிட்டனர். தற்போது, கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட நாகை சென்ற ராதாகிருஷ்ணன், சுனாமியால் பாதிக்கப்பட்டு தன்னால் வளர்க்கப்பட்ட தமிழரசி என்ற பெண்ணை சந்தித்தார். மீனா, சவுமியா இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று தமிழரசியிடம் விசாரித்தார்.
மீனா அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றில் 12- ம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பதாகத் தமிழரசி, ராதாகிருஷ்ணனிடம் கூறினார். தொடர்ந்து ராதாகிருஷ்ணன் அந்தப் பள்ளிக்கே சென்று மீனாவைச் சந்தித்து நலம் விசாரித்தார். ராதாகிருஷ்ணனை பார்த்ததும் மீனா, ``அப்பா எப்படி இருக்கீங்க'' என்று கேட்டதும் சுற்றியிருந்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள். சுனாமியால் பாதிக்கப்பட்டு பிரிந்தவர்கள் பல ஆண்டுகள் கழித்துக்கூட மீண்டும் சேர்ந்துள்ளனர். அத்தகைய எண்ணத்தில், மீனாவிடம், உன்னைத் தேடி யாராவது வந்தார்களா என்று ராதாகிருஷ்ணன் விசாரிக்க, ``யாருமே வரலப்பா'' என்கிற பதிலைக் கேட்டதும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் மனம் கலங்கிப் போனார்.
ராதாகிருஷ்ணன், `நன்றாகப் படிக்க வேண்டும். மனம் கலங்கக் கூடாது ' என்று மீனாவுக்கு ஆறுதல் கூறினார். பி.காம் படிக்க விரும்புவதாக ராதாகிருஷ்ணனிடம் மீனா கூறினார். அதற்கான முழுச் செலவையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ராதாகிருஷ்ணன் மீனாவிடம் தெரிவித்தார். மற்றொரு குழந்தையான சவுமியா வளர்ந்து தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட ராதாகிருஷ்ணன், இன்னொரு நாள் சவுமியாவை சந்திப்பதாக உறுதி அளித்தார்.
தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் தன்னால் மீட்கப்பட்ட சிறுமியரை இப்போதும் நினைவு வைத்துச் சந்தித்தது சுற்றியிருந்தவர்களுக்கு வியப்பை அளித்தது.
Comments
Post a Comment